Articles

முருகன் என்றால் அழகன். நல்லூர் கந்தன் என்றால் அலங்காரக் கந்தன் என்று பொருள்.
கதிர்காமக் கந்தனை காவற்கந்தன் என்றும், செல்வச்சந்நிதியானை, அன்னதானக் கந்தன்
என்றும், அழைப்பதுபோல் நல்லூரானை, முருகபக்தர்கள் அலங்காரக் கந்தன் என்றும்
அழைப்பதுண்டு. முருகனின் நாமங்கள் பல புராணங்களில் முருகனின் திருவுருவம்
குமரன், கந்தன், வீசாகன், குகன் என்ற நான்கு வடிவங்களில்
குறிப்பிடப்பட்டுள்ளது. கந்தன் கடம்ப மாலையை சூடி கடம்ப மரத்தின் கீழ் உறைபவன்
என்கிறது சிலப்பதிகாரம்.

முருகனை தமிழ் கடவுள் என்று கூறுவதற்குப் பல சான்றுகள் உண்டு. அகத்தியனுக்கு
தமிழைத் தந்தவனும் முருகன், குமரகுருபரனுக்குப் பேச்சுத்திறனை அளித்தவனும்
முருகன், முத்துசாமி தீட்சிதருக்குப் பாடும் வல்லமையையும், ஒளவைப்பிராட்டிக்கு
ஞானத்தையும் புகட்டியவன் முருகன் என்பன ஒரு சில உதாரணங்கள்.

அழகிய முருகன், அலங்கார வடிவில், தமிழ் கடவுளாக, தமிழர்கள் வாழும் வட
பகுதியில், நல்லூரானாக குடிகொண்ட இடம்தான் நல்லூர் கந்தசாமி திருக்கோவில்.
இந்தத் திருக்கோவில் சரித்திர பிரசித்தி பெற்ற ஒரு புண்ணிய ஸ்தலம். முருக
அடியார்கள் பலரின் வேண்டுதல்கள் நிறைவேற்றப்பட்ட அற்புத திருத்தலமும்மாகும்.

நல்லூர் கந்தசாமி கோவிலில் திருவிழா என்றால், யாழ்நகரில் மட்டுமல்ல, முருக
அடியார்கள் அனைவரது உள்ளங்களிலும் உற்சாகம்தான். இலங்கையில் தென்பகுதியிலே,
கதிர்காமக் கந்தனின் கொடியேற்றத் திருவிழாவைத் தொடர்ந்து வட பகுதியிலுள்ள
நல்லூர் கந்தன் ஆலயத்தில் கொடியேறுவது ஒரு சிறப்பாகும். அதுமட்டுமல்ல,
வடக்கிலும் தெற்கிலும் பிரசித்திபெற்ற, புகழ்பெற்ற, பாடப்பட்ட முருகனது
ஆலயங்கள் இரண்டும், வேலாயுதத்தை முழு அடிப்படையாகக் கொண்டுள்ளமை மற்றுமொரு
சிறப்பாகும். நல்லூர் கந்தனின் சிறப்பை யோகர் சுவாமிகள் தனது பாடலில் “நல்லூர்
தேரடியில் நான் கண்டு போற்றிசைத்தேன். சொல்லுந்தரமோ சுகம்’ என்றும் “பஞ்சம் படை
வந்தாலும் பாரெல்லாம் வெந்தாலும் அச்சுவமோ நாங்களடி கிளியே, நல்லூர் கந்தன்
தஞ்சமடி’ என்றும், நல்லூரான் சிறப்பை எடுத்துக்காட்டியுள்ளார்.

முருகவழிபாட்டில், குறிப்பாக உருவ வழிபாடு அதாவது, வேல் வழிபாடு பழைமை
வாய்ந்தது. பண்டைய காலத்தில் வேலை வழிபட்டு வந்தவர்களைப் பற்றிய வரலாறுகள் பல
உண்டு. வேலை வழிபட்டுவந்தால் அனைத்து இடர்களும் விட்டுவிலகும் என்பது ஐதீகம்.
இதனால்தான் நம் முன்னோர்கள், “வேலுண்டு வினை தீர்க்க’ என்றும் கூறுவர். நல்லூர்
கந்தன் ஆலயத்தின் கருவøறயிலும் முருகனது வேலுக்குத்தான் முக்கியத்துவம்
கொடுக்கப்பட்டுள்ளது. வேலின் மகிமையை எடுத்துக்கூற, அருணகிரியாரின் திருப்புகழ்
ஒரு எடுத்துக்காட்டு. முருகனது புகழைப்பாடச் சற்று தயங்கிய அருணகிரியாரின்
நாவில் முருகன் தனது வேலின் நுனியால் “ஓம்’ என்ற மந்திரத்தை எழுதி முருகனது
அருளால் பாட வைக்கப்பட்டதுதான் திருப்புகழாகும். வடபகுதியில் பிரசித்தி பெற்ற
ஆலயங்களில் முக்கியமானது இந்த நல்லூரான் பதி. முருகனின் ஆறுபடை வீட்டுக்கு
கொடுக்கப்படும் முக்கியத்துவம் இலங்கையிலுள்ள நல்லூர் கந்தனுக்கும், கதிர்காமக்
கந்தனுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை வரலாற்றில், தமிழ் மன்னனின் தலைநகரென்று சிறப்பைப் பெற்றது இந்த
நல்லூர். யாழ். ஆண்ட அரசர்களின் பக்திக்கும் வழிபாட்டுக்கும் திருத்தலமாக
அமைந்த பெருமை நல்லூர் கந்தசாமி திருக்கோவிலுக்குண்டு. நல்லூர் என்ற பெயரிலே
நன்மையும் நலனும் பொழிவும் நிறைந்துள்ளதான கருத்தும் உண்டு.

நல்லூர் ஆலயம் பழைமைவாய்ந்த ஒரு ஆலயமாகும். கி.பி. 948 ஆம் ஆண்டு புவனேகபாகு
என்ற சோழ அரசு பிரதிநிதியால் குருக்கள் வளவு என்ற இடத்தில் இவ்வாலயம்
கட்டப்பட்டது. அதன்பின் செண்பகப் பெருமானின் படையெடுப்பால் இவ்வாலயம்
அழிவுற்றது. அதன்பின் செண்பகப் பெருமானினால் இவ்வாலயம் 1467 ஆம் ஆண்டளவில்,
முத்திரைச்சந்திக்கு அருகாமையில் மீண்டும் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது.
கி.பி. 1621 இல் போர்த்துக்கேயரின் வருகையாலும் படையெடுப்பாலும் மீண்டும் இந்த
ஆலயம் தகர்க்கப்பட்டது. சுமார் 400 ஆண்டுகள் ஆண்ட சைவத்தமிழ் மன்னர்களின்
பிடியிலிருந்து யாழ்ப்பாணம் போர்த்துக்கேயரின் கைகளில் சிக்கியது.
இதைத்தொடர்ந்து கி.பி. 1658 இல் படையெடுத்த ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தைத் தம்
வசப்படுத்தினர். இவர்கள் நல்லூர் ஆலயப்பகுதியில் வேறு மத தேவாலயத்தை
நிறுவினார்கள். இதன் காரணமாக 1734 ஆம் ஆண்டளவில் அங்கு வாழ்ந்த இந்துமக்கள்,
ஒரு இடத்தை எடுத்து மடத்தை கட்டி, அதில் ஒரு வேலை நிறுவி கந்தப்புராணம்
படிக்கும் ஸ்தலமாக உருவாக்கினார்கள்.

அன்றைய காலகட்டத்தில் வாழ்ந்துவந்த ஆறுமுக நாவலர், இந்துமத வளர்ச்சிக்குப்
பாடுபட்டு வந்தார். கந்தப்புராணம் படிக்கும் இந்த ஸ்தலத்தை தானே முன்னின்று
நடத்தியது மட்டுமல்லாமல், நல்லூர் ஆலயப்பணிக்கு ஒரு தொகையும் கொடுத்துதவினார்.
கி.பி. 1749 ஆம் ஆண்டளவில் இரகுநாத மாப்பாண முதலியாரும், கிருஷ்ணயர் சுப்பையா
குருக்களும் இணைந்து நல்லூர் ஆலயத்தை இன்றைய இடத்தில் கட்டுவித்தார்கள்.
சிங்கைப் பரராசசேகர மன்னன், நல்லூர் கந்தசாமி கோவிலின் வடக்குத் திசை பக்கமாக
சட்டநாதர் கோவிலையும், கிழக்குத்திசை பக்கமாக வெயிலு கந்தபிள்ளையார் கோவிலையும்
தெற்குதிசை பக்கமாக கைலாசநாதர் கோவிலையும் மேற்குதிசை பக்கமாக வீரமாகாளி அம்மன்
கோவிலையும் கட்டுவித்தான்.

நல்லூர் திருவிழாவின் வருடாந்த உற்சவம் ஆடி அமாவாசை தினத்திலிருந்து ஆறாம்நாள்
கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஆவணி அமாவாசை தினத்தன்று தீர்த்த திருவிழாவுடன்
நிறைவுபெறுகிறது. நல்லூர் திருவிழாவைப் பார்ப்பது ஒரு கண்கொள்ளாக்காட்சி.
பக்தியுள்ள முருக பக்தர்களுக்கு அளவில்லா மகிழ்ச்சி. அதனால்தான் முருகனின் அழகை
ரசிப்பதற்கு கந்தனைக் காண நாலாயிரம் கண்கள் வேண்டுமென்று அருணகிரிநாதரின்
திருப்புகழும், முருகனின் ஆறுமுகங்களிலும் திருநீறு அணிந்துள்ள அழகை ஆறு பிறை
நிலவுகளைத் தரித்திருப்பதுபோல காட்சியளிக்கிறது என்று கந்தர் கலிவெண்பாவும்
எடுத்துக் காட்டுகின்றன.

தென் இந்தியாவில் முருகனுக்கு, அவனது ஆறுபடை வீடுகள் பெருமைப்படுத்துவதைப்
போன்று வட இலங்கையில் எம்பெருமான் முருகனுக்கு அவனது நல்லூரான்பதி
பெருமைப்படுத்துகின்றது..


Thanks & Regards
Jeyaseelan Senthuran


Leave a Comment