Articles

இன்று நல்லுார் கந்தசுவாமி கோவிலில் அழகிய அதிகாலை வேளையில் கொட்டும் சாரல் மழைக்கு மத்தியில் கந்தனின் மணி ஓசை அத்துடன் திருப்பள்ளி எழுச்சி காதுகளிற்கு ஓரு இனிமையை உண்டாக்கியது என்றால் மிகையாகாது.  தொடர்ந்து வழமையான நித்திய பூஜை   கண்களிற்கு விருந்து படைத்தது.

விசேடமாக ஆறுமுகசுவாமி மீண்டும் தனது மெருகூட்டப்பட்ட அழகிய இருப்பிடத்தில் இன்று காட்சி தந்தார். அழகாக உருவாக்கப்பட்ட அறுகோணி வடிவிலான அழகிய கறுப்பு பளிங்கு கற்கள் பதிக்கப்பட்ட இருப்பிடத்தில் அமர்ந்து  அருட்காட்சி வழங்குகிறார். அத்துடன் இன்று முத்துக்குமாரசுவாமி பீடத்தில் பாலமுருகன் காட்சி கொடுத்தார்.

தொடர்ந்து வசந்தமண்டபத்திலே முத்துக்குமாரப் பெருமான் வள்ளி தெய்வயானை சகிதம் ஒன்றாக காட்சி தந்தார். கொட்டும் மழையினை கூட பொருட்படுத்தாமல் அடியவர்கள் வந்த வண்ணமே இருந்தனர். தொடர்ந்து அழகிய ரிஷப வாகனத்தில் எம்பெருமான் உள்வீதி வலம் வர ஆயத்தமானார். மழையும் வழமை போன்று தன் வீரத்தை அதிகரித்தது. இருப்பினும் நல்லுார் கந்தனின் வழமையான அற்புதம் இன்றும் அரங்கேறியது. சுவாமி  மேற்கு வீதிக்கு வந்ததும் மழை விட்டுக் கொடுத்தது. பின்னர் முத்துக்குமாரப் பெருமான் வெளிவீதி வலம் வந்தார்.

 

திருவெம்பாவை

மாதங்களில் சிறந்ததெனப் போற்றப்படுவது மார்கழி மாதமாகும். இம்மாதம் பிறந்ததும் இந்துக்களின் மனங்களில் ஒலிப்பவை திருவெம்பாவை, திருப்பாவை, திருப்பள்ளி எழுச்சிப் பாடல்களே. மாணிக்கவாசகர் சுவாமிகள் அருளிய திருவெம்பாவையில் இருபது பாடல் களும் திருப்பள்ளி எழுச்சியில் பத்துப் பாடல்களும் உள்ளன. அதேபோல் ஆண்டாள் பாடிய திருப்பாவையில் முப்பது பாடல்கள் உள்ளன.

‘திரு’, ‘எம்’, ‘பாவை’ என்பவற்றின் கூட்டாக திருவெம்பாவையைக் காணலாம். இதில் ‘திரு’ தெய்வத் தன்மையையும், ‘எம்’ உயிர்த் தன்மையையும், ‘பாவை’ வழிபாட்டிற்குரிய திருவுருவத் தன்மையையும் குறிப்பிடுகின்றன. கன்னிப் பெண்கள் அதிகாலை துயிலெழுந்து ஒருவரை ஒருவர் அழைத்துச் சென்று ஆறு, குளம் முதலிய நீர் நிலைகளில் நீராடி இறைவன் புகழ்பாடி பாவை நோன்பு நோற்பதை திருவெம்பா வைப் பாடல்கள் பளிச்சிட்டுக் காட்டுகின்றன.

 

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்

சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்

மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்

மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்

வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து

போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன்

ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என் னேஎன்னே

ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய்

 

மணமாகாத கன்னிப் பெண்கள் தங்களுக்கு நல்ல கணவர் வாய்க்க வேண்டுமென்றும், நாடு சிறக்கவும் நாட்டு மக்கள் நலமே வாழ்வும் நல்ல மழை ஒழுங்கு தவறாது பொழிய வேண்டுமெனவும் பாவை நோன்பின் மூலம் வேண் டுகின்றனர். திருவண்ணாமலைக்குச் சிவதரிசனம் செய்வதற்காகச்சென்ற மாணிக்கவாசகர் சுவாமிகள் அங்கு மங்கையர் வைகறைப் பொழுதெழு ந்து நீராடச் செய்வதையும் பாவை செய்து வழிபடுவதையும் கண்டு தன்னையும் ஒரு கன்னிப் பெண் ணாகப் பாவனை செய்து பாடியதே திரு வெம்பாவையாகும்.

பாவை நோன்பின் மூலம் பக் தியும் ஒழுக்கமும் நிறைந்த சிவத் தொண்டர்களே வாழ்க்கைத் துணைவர்களாகக் கிடைக்க வேண் டுமென வேண்டினர் கன்னிப் பெண்கள். திருப்பாவை, திருவெம் பாவை பாடல்கள் மூலம் நாட்டில் நல்ல மரபை ஏற்படுத்த முயற்சி செய்யப்பட்டுள்ளதைக் காணலாம். திருவெம்பாவையில் உள்ள எல்லாப் பாடல்களும் ‘எம்பாவாய்’ என்று முடிவுறும். இதிலுள்ள பாடல்களை ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கலாம். மகளிர் ஒருவரை ஒருவர் அழைத்துச் செல்லுதல், நீராடல், இறை இயல்பு கூறல், தங்கள் வேண்டுதலை வேண்டல், இறைபுகழ் பாடுதல் என்பவையாகும்.

திருவெம்பாவையிலுள்ள முதல் எட்டுப் பாடல்களும் மங்கையர் ஒருவரை ஒருவர் துயிலெழுப்பி நீராட வரவழைத்துச் செல்வதைக் குறிப்பிடுபவையாக அமைந்துள்ளன. இறைவனின் பெருமை, மகிமை பற்றித் தேனாய் இனிக்கப் பேசிய சில மங்கையர் தாங்கள் கூறியவற்றை மறந்து துயில்கொள்வதைக் கண்ட தோழியர்கள் அவர்கள் கூறியவற்றை நினைவுபடுத்தித் துயிலெழுப்பி அழைத்துச் செல்வதை ஓரிரு பாடல்களில் காணலாம்.

இப்பாடல்களிலே வாள் போல் கூரிய கண்களையுடைய பெண்ணே என்றும், முத்துப் போல் ஒளிவிடும் பற்களையுடைய மங்கையே என்றும், ஒளிபொருந்திய முத்துப்போல் புன்முறுவல் கொள்பவளே என்றும், அழகான கூந்தலை உடையவளே என்றும் மான் போன்றவளே என்றும் வர்ணித்து தூக்கத்திலுள்ள மங்கையரை தோழிப் பெண்கள் எழுப்புவதைக் காணலாம். அடுத்துவரும் ஐந்து பாடல்களில் மங்கையர் நீரில் மூழ்கி நீராடுதலைக் குறிப்பிட்டுப் பாடப்பட்டுள்ளது

நீராடச் சென்ற பொய்கையிலே நீல நிறக் குவளை மலர்கள் பூத்துப் பொலிவூட்டுகின்றன. ஒளிவீசும் செம்மையான தாமரை மொட்டுக்களும் காணப்படுகின்றன. ஆங்காங்கே பறவையினம் ஒலியெழுப்பிக் கொண்டிருக்கின்றன. மலர்களில் தேனுண்ண வந்த வண்டினம் மங்கையரின் அழகுக் கூந்தலைச் சுற்றி வட்டமிட்டு இன்னிசை பாடுகின்றன. அத்தோடு மங்கையர் நீராடும்போது அவர்கள் காதுகளில் அணிந்துள்ள ‘குழை’ எனும் காதணிகள் ஆடவும், அவர்கள் கைகளில் உள்ள வளையல்கள் அசைந்தும் ஒலி எழுப்புகின்றன. இத்தனை அழகுகளும் நிறைந்த பொய்கையில் மங்கையர் மூழ்கி மூழ்கி நீராடுகின்றனர்.

இவ்வாறு நீராடும் மங்கையர் தாங்கள் இறைவனின் அடிமைகள் என்றும், இறையடியார்களுக்கு அடிமை செய்ய விரும்புவதையும், அவ்வாறானவர்களே தாங்கள் கணவர்களாக வேண்டும் என்றும் வழிபடுகின்றனர். அதன் மூலம் தங்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் உருவாகுமென்றும் கூறுகின்றனர். பொய்கைக்கு நீராட வருபவர்கள் அழுக்காகிய ஆணவம், கன்மம், மாயை என்பவற்றையும் கழுவிக்கொள்வார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. உமையம்மைக்கு தனது உடம்பின் ஒரு பாகத்தைக் கொடுத்தவனும், ஊர் பேர் உற்றார் அயலவர் யாருமற்றவனுமான இறைவன் எல்லாப் பொருட்களிலும் உள்ளான் என்று பாடுகின்றார்கள். தொண்டர்கள் உள்ளத்தில் உறைகின்ற இறைவன் புகழ்பாடி நீராடுகின்றார்கள்.

திருவெம்பாவையின் நிறைவுப் பகுதிப் பாடல்கள் மூலம் மங்கையர் தங்களுக்காக மாத்திரம் வேண்டுகோளை வைக்காது உலகோர் வளமே வாழப் போதிய மழை பொழிய வேண்டுவதைக் காணலாம். ஐயன் திருவள்ளுவரும் திருக்குறளின் இரண்டாம் அதிகாரமாக ‘வான் சிறப்பை’ வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இறைவனின் மெய்யடியாற்கு உமையம்மையார் அருள்மழை பொழிவதைப்போல் கடல் நீரை முகந்து மேலெழுந்த ஏ மேகமே நீயும் மழைபொழிவாயாக என்று மங்கையர் பாடுவதை ஒரு பாடலில் காணலாம்.

மக்கள் உறக்க நிலையை நீக்கி விழிப்பு நிலை எய்த வேண்டும், நாடு நலம்பெற ஒழுங்காக மழை பொழிய வேண்டும், கன்னிப் பெண்கள் தாங்கள் விரும்பும் வாழ்க்கைத் துணைவர்களை அடைந்து அகமகிழ்ந்து நல்வாழ்வு வாழ வேண்டும், சிவத்தொண்டு சிறக்க வேண்டும் என்பதே பாவை நோன்பின் நோக்கமாக இருப்பதைக் காண்கின்றோம்.


Leave a Comment