Articles

விண்ணுலோகதேவர்கள் வாழ்த்தி வணங்கும்;

மண்ணுலோகமானுடர்கள் போற்றி வணங்கும்;

நல்லையம்பதியானுக்கு இம் மாதம் 28 இல் கொடி

[துவஜாரோகணம்]

ஏவிளம்பி வருட மகோற்சவ சிறப்பிதழ்

 

உலகெலாம் நிறைந்து விளங்குகின்ற எல்லாம் வல்ல பரம்பொருளான முருகப்பெருமான் தம்மை நினைத்து உள்ளமுருகி வணங்கி வாழும் அடியார்களுக்கு அருள்பாலிக்கும் புண்ணியக்ஷத்திரம் நல்லூர்க் கந்த சுவாமி கோயில்.

வரலாற்றுப் பிரசித்திபெற்ற நல்லூர்க் கந்தசுவாமி கோயில் கொடியேற்ற நாள் இம் மாதம். வானளாவ உயர்ந்த அழகான இராஜகோபுரங்களுடன் நல்லூரிலே அமைந்திருக்கின்ற இந்த முருகப் பெருமான் ஆலயம் மிகவும் கீர்த்தி பெற்ற மூர்த்தி இருக்கும் புனித ஸ்தலமாகும்.

 

இந்த எல்லையில்லாக் கருணைமிக்க தொல்லை வினை தீர்க்கும் நல்லையம்பதிக் கந்தனுக்கு

ஏவிளம்பி வருட மஹோற்சவம் (28.07.2017) வெள்ளிக்கிழமை காலை பத்து மணிக்கு துவஜாரோகணம் எனும் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது.

கொடியேற்றதினத்தன்று சிவப்பு நிறத்திலே வரும் சிங்கார வேலனின் அழகு, வார்த்தைகளால் சொல்ல முடியாது. கருணையே வடி வான கந்தப் பெருமானின் வேல் அருள்புரியும் அழகுடன் அலங்காரமாக நடுநாயகமாக வர ஒருபக்கம் அன்பு அண்ணன் விநாயகப் பெருமானும் மற்றப் பக்கம் அருட் சக்திகளான வள்ளியும்,தேவசேனாவுடன் அழகாக வரும் அற்புதமான அருட் காட்சி பக்தி பூர்வமானது.

 

“எந்நாளும் நல்லூரை வலம் வந்து வணங்கினால் இடர்களெல்லாம் போமே” என்றபடி நல்லூரிலே வருடாந்த மஹோற்சவ காலத்தில் முருகனை வணங்குவதற்காக அடியார்கள் கூட்டம் அலைமோதும் பக்தி நிறைந்த காட்சி அருள்மயமானது.

 

வாழ்த்த வாயும் நினைக்க மட நெஞ்சும் தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவனாகிய தமிழ்க் கடவுள் முருகன் விரும்பியுறையும் இடம் இந்த நல்லையம்பதியாகும்.

இருபத்தைந்து நாள்கள் நடைபெறுகின்ற இம்மஹோற்சவத்திலே ஒவ்வாரு நாளும் விதவிதமான அலங்காரத்துடன் வெவ்வேறு அழகிய வாகனங்களில் முருகப்பெருமான் திருவீதி வலம் வரும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும். அழகன் முருகன் அலங்காரப் பிரியன். இந்த நல்லூரிலே எழுந்தருளி வீற்றிருந்து அடியார்களும் பெருமானாக அழகெல்லாம் சேர்ந்து ஓருரு எடுத் தாற்போன்று அலங்காரமாக வரும் முருகன் கருணை மிகு கந்தப் பெருமானாவான்.

 

இலங்கையிலே எத்தனையோ முருகன் ஆலயங்கள் இருந்தும் இந்த நல்லூர்ப்பதியிலே மட்டும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிவதன் காரணம் என்ன? அடியார் கூட்டம் முண்டி யடித்துக்கொண்டு அலைமோதுவதன் மர்மம் என்ன? அது மூலஸ்தானத்திலே வீற்றிருக்கும் வேற்பெருமானின் திருவருளேதான்.

 

இன்னகாரியம் எனக்கு நிறைவேற்றித் தரவேண்டும் என்று பக்திபூர்வமாக நேர்த்தி வைத்து உள்ளன்போடு வணங்கினால் அந்தக் காரியம் எவ்வித தடங்கலுமின்றி நிச்சயமாக நிறைவேறிவிடும் கந்தப் பெருமானைக் கைதொழுதால் எந்தக் காரியமும் நிறைவேறும் என்ற பரிபூரணமான நம்பிக்கையே காரணமாகும்.

 

தொல்லை வினை தீர்த்து வைக்கும் கந்தன் கருணைக்கு நிகரே இல்லை. நம்பியோரை ஒருபோதும் கைவிட மாட்டான் “நல்லூரான் திருவடியை நான் நினைத்த மாத்திரத்தில் எல்லாம் மறப்பேனடி கிளியே இரவு பகல் காணேனடி” என்று யோகர் சுவாமிகள் பாடியுள்ளார் “பஞ்சம் படை வந்தாலும் பாரெல்லாம் வெந்தாலும் ஆறுமுகன் தஞ்சமடி” என்ற வரிகளில் எவ்வளவு உண்மை பொதிந்திருக்கிறது பார்த்தீர்களா? செல்வச் சந்நிதியிலே இருக்கும் முருகனுக்கு அன்னதானக் கந்தன் என்று பெயர். கதிர்காமத்திலே உள்ள இறைவனுக்கு அருட் கந்தன் என்று பெயர். அதுபோன்று இன்று கொடியேற்றம் காணும் நல்லைக் கந்தனுக்கு அலங்காரக் கந்தன் என்று பெயர். வீதியுலாவரும் கந்தனின் பேரழகு காணக் கண்கோடி வேண்டும். “சேலார் வயற்பொழில் செங்கோடனைச் சென்று கண்டு தொழ நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே” என்று பாடுகின்றார் அருணகிரிநாதர். இது முழுக்க முழுக்க உண்மையாகும். நல்லூரிலே தினமும் முருகன் வீதியுலா வரும் அழகுக் காட்சி வர்ணிக்க முடியாதது. நேரில் வந்து பார்த்தால்தான் அந்த அழகின் தாற்பரியம் புரியும். அவ்வளவு கொள்ளை அழகு முருகனின் திருவிழாக் காட்சிகள்.

 

பத்தாம் திருவிழா மஞ்சம் முதலாக பூச்சப்பறம், கைலாச வாகனம், தங்கரதம், தேர், தீர்த்தம், திருக்கல்யாணம் நிகழும் பூங்காவனம் என்று ஒவ்வொரு விழாவும் அற்புதமானவை. இந்தத் திருவிழாக்களைப் பார்ப்பதற்காக நாட்டின் நாலாபக்கங்களிலிருந்தும் இந்த நல்லூரை நோக்கி அடியார்கூட்டம் படையெடுத்து வரும். அதிகாலை நான்கு மணிக்கே அடியார்கள் வருவதற்கு ஆரம்பித்து விடுவார்கள். நல்லூர்ப்பதியே விழாக்கோலம் பூண்டு காணப்படும். “முருகனுக்கு அரோஹரா! கந்தனுக்கு அரோஹரா! என்று வாய் உரக்கச் சொல்லிய வண்ணம் அடியார் கூட்டம் அங்கப் பிரதட்சணம் செய்யும் திருவருள் நிறைந்த பக்திபூர்வமான காட்சியை வேறெங்குமே காணமுடியாதது. பெண் அடியார்கள் விழுந்து விழுந்து கும்பிட்ட வண்ணம் அடியளிக்கும் நிகழ்வும் பக்திபூர்வமானதே.

 

தேர், தீர்த்தம், பூங்காவனம் இம் மூன்று திருவிழா நாள்களுமே அடியார் கூட்டம் அலைமோதும் நாள்களாகும். தினமும் முன்னே மங்கள தவில் நாதஸ்வர இசை முழங்க. அடியவர்கள் பக்திப்பரவசத்துடன் சூழ்ந்துவர. பஜனைக் கோஷ்டிகள் முருகன் புகழ் பாடி வர இடம்பெறும் இனிய நல் விழாப் பொலிவு வர்ணனையில் எழுத்தில் அடங்காது.

 

ஸ்ரீ சங்கபோதி புவனேகபாகுவினால் அமைக்கப்பட்ட இந்த ஆலயத்தில் வாசலில் ஒரு அழகிய இராஜகோபுரமும் இருமருங்கும் மணிக்கோபுரங்களும் அணிசெய்கின்றன. தெற்கு வாசல் மற்றும் வடக்கு வாசலில் இரு பெரிய இராஜகோபுரம் வானளாவ உயர்ந்து காட்சியளிக்கின்றது. ஆலயத்தின் நான்கு வீதிகளும் நடமாடுவதற்கேற்ற வகையில் துப்புரவான வெண்மணல் பரப்பப்பட்டுள்ளது. வழிபாட்டுக்கு வரும் அடியார்கள் முருகனைத் தரிசிப் பதற்கு வசதியாக எல்லா இடங்களிலும் தொண்டர்கள் நின்று சேவை செய்த வண்ணம் இருப்பர். ஆலய உள் வீதி, வெளி வீதி இரண்டிலும் சன நெருக்கடி ஏற்படாமல் இத்தொண்டர்கள் செய்யும் அரிய சேவை மகத்தானது.

 

முருகப் பெருமானுடைய பேரருட் கருணையைப் பெற்றுக் கொள்வதற்காக இந்த ஆலயத்தில் ஆறு காலப் பூசை நிகழ்த்தப்படுகின்றது. இந்தப் பூசையைப் பார்ப்பதற்கு அடியார்கள் முன்னேறுவது ஓர் அலாதியான காட்சி. இப்படியான முருகனின் திருவிழாப் பவனி காண்பது கிடைத்தற்கரிய பேறாகும்.

திருவிழா காண கந்தன் அடியார்கள் திரண்டு வருகின்றனர். முத்தமிழால் வைதாரையும் வாழ வைக்கும் கலியுக வரதன் முருகனின் அருள்பெற்று வாழ அவனருளையே நாடி நிற்போமா!

மகோற்சவகாலத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் எமது தளங்களின் ஊடாக கண்டு முருகப்பெருமானது அருளினை வேண்டிநிற்கலாம்.

நல்லூர் கந்தசுவாமி கோவில்

#மகோற்சவ_விஷேட_தினங்கள் - ஏவிளம்பி(2017) வருடம்

Nallur Kandaswamy Kovil

#Programme_Of_Important_High_Festival (2017) - #August

Tags:

Leave a Comment