Nallur 2019 Festival day 04 pm

நல்லூர்க் கந்தவேற்ப் பெருமானின் 4ம் நாள் உற்சவம் மாலை இன்று கந்தவேள் பெருமான் வள்ளி தேவசேனாதிபதி சமேதரராக பச்சைமயில் ஏறி பவனி வரும் நாள் இத் தினதிலே நாம் மிக முக்கியமாக மயூரம் (மயில்) பற்றி ஒரு சிறிய தொகுப்பை வழங்குகின்றோம்: முருகப்பெருமானின் வாகனம் மயில் என்பது அனைவரும் அறிந்ததே. அதன் சிறப்புகள் என்ன தெரியுமா? மயில் அழகில் சிறந்தது மட்டுமல்ல, அமைதியிலும் சாதுவான பறவை. அரக்க குணங்கள் கொண்ட பதுமசூரனின் உடலில் ஒரு பாதியை மயிலாகவும், மற்றொன்றை சேவல் கொடியாகவும் மாற்றினார் முருகப் பெருமான். அதில் மயிலை தன்னுடைய வாகனமாக வைத்துக் கொண்டார். அதற்கு உண்மையான தத்துவம், மனிதர்களிடம் இருக்கும் அசுர குணம் இறைவனை சரணடையும் போது சாதுவாக மாறிப்போகும் என்பதாகும். மயில் தன்னுடைய தோகையை விரித்து ஆடினால் மழை பொழிந்து உலகம் செழிக்கும் என்பார்கள். மழை வரப்போவதை முன்கூட்டியே அறியும் திறன் கொண்டது மயில். உலகம் செழிப்பதை சொல்லும் மயில், தோகை விரிக்கும்போது அனைத்தும் இறைவனே என்பதை விளக்கும் ‘ஓம்’ வடிவம் தோன்றும். மயிலிறகால் தீப்புண்களுக்கு மருந்திடுவதைப் பார்த்திருக்கலாம். அவ்வாறு செய்வதன் மூலம் தீயால் ஏற்பட்ட காயங்கள் விரைவில் குணமடையும். தீய சக்திகளை விரட்டவும் மயில் தோகைகள் உதவுகிறது. மயிலின் குரல் உயிர்கள் அனைத்திற்கும் ஏதேனும் ஒரு குறை உண்டு என்பதை நமக்கு புரியவைக்கும். இப்படி அழகுக்கு மட்டுமின்றி வாழ்வியல் தத்துவங்களையும் கடவுளின் வாகனமாக இருந்து நமக்கு உணர்த்தும் மயிலின் சிறப்புகள் பல. “மயில் அழகு அதன் தோகை அழகு பச்சை மயில் ஏறிவரும் பாலகனோ அழகோ அழகு”.