கந்த சஷ்டி விரதம்
மும்மலங்களை அழித்த முருகப்பெருமானின் விரதம்.
கந்தப் பெருமான் சூரனைச் சங்கரித்த பெருமையைக் கொண்டாடுவதே ஸ்கந்த சஷ்டி விரத
விழாவாகும். முருகன் கோயில் கொண்டுள்ள எல்லா ஆலயங்களிலுமே ஸ்கந்தசஷ்டி விரதம்
மிகச் சிறப்பாக ஆறு நாட்கள் அனுஷ்டிக்கப்படுகின்றது. ஐப்பசி மாதத்தில் வரும்
வளர்பிறை சஷ்டி அன்றுதான் முருகப் பெருமான் சூரபத்மனை அழித் த நாள்.
கந்த விரத மகிமை
முழு முதற் கடவுளாக கலியுகக்கந்தப் பெருமான் போற்றப்படுகின்றார். மனித மனம்
விரதத்தின் போது தனித்து விழித்து பசித்து, இருந்து ஆறு வகை அசுத்தங்களையும்
அகற்றித் தூய்மையை அடைகின்றது. தூய உள்ளம், களங்கமற்ற அன்பு, கனிவான உறவு
என்பவற்றிற்கு அத்திவாரமாக *கந்தசஷ்டி* விரதம் அமைகிறது.
கொடுங்கோலாட்சி செலுத்திய ஆணவத்தின் வடிவமாகிய சூரனையும், கன்மத்தின் வடிவமாகிய
சிங்கனையும், மாயா மலத்தின் வடிவமாகிய தாரகனையும், அசுர சக்திகளையெல்லாம்
கலியுக வரதனான பெருமான் அழித்து, நீங்காத சக்தியை நிலை நாட்டிய உன்னத நாளே கந்த
சஷ்டியாகும்.
கந்தசஷ்டி விரத அனுட்டானம்
ஐப்பசித் திங்கள் சதுர்த்தசித் திதியில் வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரை ஆறு
நாட்களும் கந்தப் பெருமானை நினைத்து வழிபட்டு விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
உபவாசம் இருப்பது அதி உத்தமம் எனக் கருதப்படுகின்றது. மிளகுகளை விழுங்கி, பழம்
மட்டும் சாப்பிட்டு, தீர்த்தம் குடித்து இளநீர் குடித்து ஒரு நேர உணவு மட்டும்
உண்டு அவரவர் தேக நிலைக்கேற்ப *கந்தசஷ்டி* விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
ஆறாவது நாளான கந்தசஷ்டியன்று பூரண உபவாசம் இருத்தல் வேண்டும். விரதம் ஆரம்பமான
தினத்தில் ஆலயம் சென்று சங்கர்ப்பம் செய்து காப்புக் கட்டி விரதத்தைத்
தொடங்குவார்கள் முருகனுடைய விரதங்களுள் கந்த சஷ்டி விரதம், கார்த்திகை விரதம்,
வெள்ளிக்கிழமை விரதம் ஆகிய மூன்றும் பிரதானமானவையாகும். கந்த சஷ்டி விரதம்
தொடர்ந்து ஆறு வருடங்களும், கார்த்திகை விரதம் பன்னிரெண்டு வருடங்களும்
வெள்ளிக்கிழமை விரதம் மூன்று வருடங்களும் அனுஷ்டிக்கப்படுகின்றது.
அசுர சக்திகளின் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும் மலங்களை மட்டுமன்றி ஆறுவகை
எதிரிகளான காமம், கோபம், பேராசை, செருக்கு, மயக்கம், பெருமை ஆகிய வகைகளை
அழித்து முற்றுணர்வு, வரம்பிலாற்றல், தன் வயமுடைமை, வரம்பின்மை, இயற்கையுணர்வு,
பேரருள் ஆகிய தேவ குணங்களை நிலை நாட்டியதால் கந்த சஷ்டி விரதமே பெருவிழாவாக
எடுக்கப்படுகின்றது. ஏனைய விரத அனுட்டானங்களைப் போலன்றி கந்த சஷ்டி
விரதானுஷ்டானத்தை பெருவாரியான ஆண்களும், பெண்களும், பிள்ளைகளும்
கடைப்பிடிக்கின்றார்கள். மாணவர்கள் படிப்பிற்கும், குடும்பப் பெண்கள் குடும்ப
நன்மைக்கும், கன்னிப் பெண்கள் நல்ல கணவனை வாழக்கைத் துணையாக அடைய வேண்டியும்,
குழந்தை இல்லாதோர் குழந்தை வேண்டியும் இவ்விரதத்தை அனுஷ்டிக்கின்றனர்.
ஞான சக்திக்கும் அசுர சக்திக்கும் இடையே ஏற்பட்ட போர்
சூரன், சிங்கன், தாரகன் முதலிய அசுரர்கள் நெடுங்காலமாக தேவர், மனிதர் யாவரையும்
துன்புறுத்தி அழித்து வந்தனர். பரமசிவன் இதற்கொரு முடிவு காணும் நோக்கில், தனது
சக்தியையே முருகப் பெருமானாகப் பிறப்பித்தார். அந்த முருகப் பெருமான் இந்தச்
சூரபதுமாதி அசுரர்களுடன் ஆறு நாட்கள் போரிட்டு வென்றார். இந்த அருட்
பெருங்கருணைச் செயலை வியந்து இப்போர் நிகழ்ந்த காலமாகிய ஐப்பசி மாத வளர்பிறை
முதல் ஆறு நாட்களையும் விரத நாட்களாகக் கொண்டு முனிவரும் தேவரும்
நோற்றுவந்தனர். இதுவே கந்த சஷ்டி என்ற பேரில் பூலோக மாந்தரும் அனுஷ்டிக்கக்
கிடைத்தது.
கந்த புராணக் கதையைச் சங்கரன் பிள்ளை சட்டியிலே மாவறுத்தார் என்ற சொற்றொடர்
மூலம் நகைச் சுவையார் வழங்குவார். சங்கரன் புதல்வராகிய முருகப் பெருமான்
ஷஷ்டித் திதியிலே மாமரமாக வந்த சூரனைக் கடிந்தார் என்பது இதன் பொருள். வெறும்
கதை சொல்லும் புராணமாகக் கந்த புராணத்தை எண்ண முடியாது. சைவ சித்தாந்த
பேருண்மைகளை உருவகப்படுத்திக் கதை வடிவில் சுவைபடத் தரும் அருமையான நூல்
இதுவாகும்.
கந்தசஷ்டி விரத பயன்கள்
இவ்விரதத்தின் போது, தினமும் கந்த சஷ்டி கவசம், கந்தர் அலங்காரம், கந்தர்
அனுபூதி, திருப்புகழ், கச்சியப்ப சுவாமிகளின் கந்த புராணம் ஆகியவற்றைப்
பாராயணம் செய்வதால், என்னவென்று சொல்ல முடியாத சாந்தி,மனஅமைதி, நிலவும். இதனை
ஒவ்வொருவரும் உணர்ந்திருப்பர்.
கந்த சஷ்டி விரத ஆறு நாட்களும் கந்தப் பெருமான் எழுந்தருளியுள்ள ஆலயங்களில்
எல்லாம் பூரண கும்பம் வைத்து விஷேட அபிஷேகமும், சண்முகார்ச்சனையும், கந்த புராண
படனப்படிப்பும் நடைபெறும். விரதம் முடிவுற்ற அன்று முருகன் ஆலயத்தில் சூரன்
போர் நடைபெற்று, மறுநாள் விரதம் அனுஷ்டித்த அனைவரும் பாறணை பண்ணி விரத பூசையை
நிறைவு செய்கின்றனர். பாறணை பண்ணும் அன்று ஆறு பேருக்கு அன்னதானம் வழங்கி
உட்கொள்ள வேண்டும்.
The site is incredible. Well organised and with ve...
hi,I like to get full day of festival video cd.how...
Respected sir, Vanakkam. Myself Muthukumar Subram...
I ,as a man , I have not seen or rather experience...
Namaste, I have been looking on the web for the m...
could you please help me to view festival vedios ...
very good information...
...